Wednesday, 5 March 2014

பத்திரமாக போய்ட்டு வாங்கமா...

வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 7, 2014 ...நேரம் மாலை 7.25 இருக்கும்.....

“பத்திரமாக போய்ட்டு வாங்கமா” என்று அவர்களிடம் சொன்னேன்....

“ம்ம்.சரி.சரி...” என்றார்கள் அவர்களும்....

அன்றைக்கு அந்த வார்த்தைகளோடு நான் அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டேன்......ஆனாலும் அவர்கள் என்னிடமிருந்து ‘நிரந்தரமாக’ விடைபெறுவதற்கு அவர்கள் கொடுத்த உத்தரவாக இருக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை....இப்பொழுதும், நடந்ததெல்லாம் கனவாய் இருக்ககூடாதா என்று நினைக்க தோன்றுகிறது....ஆனாலும்.....இவைகளெல்லாம் என்னுடைய நினைவை விட்டு நீங்க மறுக்கின்ற நிஜங்களாக எனக்குமுன் நின்றுகொண்டிருக்கிறது.
.
சென்னையில் புழலுக்கு அருகில் உள்ள வினாயகபுரம் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள ‘நாகாஸ் கிருஷ்ணா’ அப்பார்ட்மென்டில் வசிக்கும் என்னுடைய அண்ணன் குடும்பத்தாருடன் சற்று நேரம் செலவழித்துவிட்டு  நானும், என்னுடைய மனைவி, மற்றும் இரண்டு பிள்ளைகள் அங்கிருந்து புறப்பட ஆயத்தமானோம்.....கடந்த தொழிலாளர் தினமான மே 1, 2013-அன்றுதான் தங்களுடைய புதிய பிளாட்டிற்குள் அண்ணன் குடும்பத்தினர் பிரவேசித்திருந்தனர்....புதுமனைப் புகுவிழா நிகழ்ச்சிக்குப் பிறகு முதன்முதலாக  அவர்களுடைய வீட்டிற்கு இப்பொழுதுதான் நாங்கள் குடும்பமாக போகிறோம்...அதுவும் ஒரு காரணமாக.....

அன்றைக்கு இரவு என்னுடைய அம்மா, என்னுடைய அண்ணன், அண்ணி மற்றும் அவர்களுடைய எட்டு வயது மகளோடு பெங்களுர் மார்க்கமாக இரயிலில் இந்துப்பூர் எனும் ஊருக்கு போகும் திட்டம். இரண்டு மாதங்களுக்கு முன்னரே டிக்கட் முன்பதிவும் செய்யப்பட்டிருந்தது. பட்டாபிராமில் உள்ள அவர்களுடைய வீட்டிலிருந்து நான் அவர்களை என்னுடைய அண்ணன் வீட்டிற்கு கொண்டுபோய்  விடவேண்டும்... அதுதான் என்னிடம் அம்மா கேட்டுக்கொண்ட உதவி..எனென்றால் அன்றிரவு, அண்ணன் குடும்பத்தினர் அங்கேயிருந்து நேரடியாக கால் டாக்சி மூலம் சென்ட்ரல் இரயில் நிலையம் போக திட்டமிட்டிருந்தார்கள்....

68 வயது நிரம்பிய அவர்களுக்கு பல ஆண்டுகளாகவே மூட்டு பலவீனம் உண்டு. ஆகையால், அண்ணன் வீட்டிற்கு கால்-டாக்சியில் போக முடியுமா? எவ்வளவு செலவாகும்? என்றெல்லாம் அம்மா என்னிடம் ஏற்கனவே விசாரித்திருந்ததாலும், .அதிகம் செலவாகுமோ? சுருக்கமான  வழிதடத்தை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்படுமோ? என்றெல்லாம் நினைத்து அந்த யோசனையை கைவிட்டார்கள். ஆட்டோ-இரயில்-அட்டோ மூலமாக போய்விடலாம் என்று தீர்மானித்துவிட்டார்கள். ஆனாலும், நேர நெருக்கடி, மாறி மாறி பிரயாண செய்தல் மற்றும் இதர காரணங்களை கருத்தில் கொண்டு நாமெல்லாரும் கால்-டாக்சியிலேயே போய்விடுவோம் என்று அம்மாவிலடம் சொல்லிவிட்டேன்....அவர்களும் அதை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார்கள்....அம்மாவுடன் நாங்கள் எல்லாரும்(நான், மனைவி, பிள்ளைகள்) குடும்பமாய் போகவேண்டும் என்று ஏற்கனவே தீர்மானித்திருந்தோம்.....அம்மாவை அண்ணன் வீட்டிலே விட்டுவிட்டு அப்படியே அடுத்த வாரம் நாங்கள் வைக்கத் திட்டமிட்டிருந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அண்ணன் குடும்பத்திற்கு அழைப்பு கொடுக்கலாம் என்று எண்ணத்தோடும் அங்கே போயிருந்தோம்..

அம்மா பலமுறை கார் - கால்-டாக்சி பிரயாணம் செய்திருப்பார்கள்...அனாலும், நான் அவர்களை கால்-டாக்சியில அழைத்து செல்வது இதுவே முதல்முறை....அம்மாவிற்கும் பெரிய ஒரு ரிலீஃப்.....ஆட்டோ–இரயில்-ஆட்டோ போன்ற அலைச்சல்கள் இல்லாமல் சுலபமாக போய்விடலாமே என்ற எண்ணம்....தவிர சீக்கிரமாய் சென்றால் அண்ணனும் டென்ஷனாக மாட்டான் என்ற யோசனையும் இருந்தது....

7 பெப்ரவரி, வெள்ளி காலையிலிருந்தே அவர்கள் புறப்படுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள்...ஒருவித சந்தோஷம் கலந்த நிறைவோடும்  காணப்பட்டார்கள்.....எனென்றால், ஒரு சில மாதங்களுக்கு முன்னரே கண்டிப்பாக போகவேண்டும் என்று நிச்சயத்திருந்த ஒரு திருமணத்திற்கு போவதற்கு தான் இந்த பெங்களூர் பிரயாணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.....என்னுடைய அம்மாவின் இரண்டாவது அக்காவினுடைய பேரனின் திருமணம்! (முதல் அக்கா சில ஆண்டுகளுக்கு முன்னரே மரித்துவிட்டார்கள்)...அதாவது, அம்மாவோடு கூடப்பிறந்தவர்களின் குடும்பத்திலே நடக்கும் முதல் பேரப்பிள்ளை அல்லது ‘மூன்றாம் தலைமுறை’ திருமணம்...உண்மையாகவே விசேஷமான ஒரு திருமணம் தான் அது... ஒரு சில வாரங்களுக்கு முன் இருமல் மற்றும் சலியினால் சற்றே அவதிப்பட்ட அவர்கள் மருந்துகளை எடுத்துக்கொண்டிருந்தாலும், கடந்த ஒரு சில நாட்களாக திருமணத்திற்கு போகவேண்டும் என்றிருந்த உறசாகம் அவர்களுடைய பலவீனத்தை எல்லாம் முழுங்கி சாப்பிட்டுவிட்டது...

வெள்ளி இரவு புறப்பட்ட அண்ணன், அண்ணி மற்றும் அம்மா குழுவினர் மறுநாள் காலை 10.30 மணிக்கு இந்துப்பூர் இரயில் நிலையம் வந்தடைந்தனர். அந்த ஊரிலேதான் திருமண வைபவம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. சனிக்கிழமை மாப்பிள்ளை அழைப்பு-வரவேற்பு, ஞாயிறு காலை திருமணம்.  அம்மாவினுடைய உற்றார் உறவினர் அனைவரும் புடைசூழ அந்த திருமணத்தில் கலந்துகொள்ள ஆந்திர, கருநாடக மாநிலங்களில் உள்ள பல நகரங்களிலிருந்து வந்திருந்தார்கள்.  அம்மாவும், அனேக நாட்களுக்கும் பின் அவர்களுடைய அப்பா வழி உறவினர் பலரை சந்தித்ததில் மிகுந்த குதூகலத்தோடும் மகிழ்ச்சியோடும் காணப்பட்டார்கள். கூட்டிச்சென்ற மகன் மற்றும் மருமகளையும் மறந்துவிட்டு, தன்னுடைய உடன்பிறந்த சகோதர சகோதரிகளோடு கிண்டல், கேலி அரட்டையடித்துக்கொண்டு மிகுந்த சந்தோஷத்தோடு நேரத்தை கழித்திருக்கிறார்கள்.   

திருமண வைபவம்  நிறைவுற்றபின் மற்ற இடங்களிலிருந்து வந்தவர்கள் அவரவருடைய பட்டணங்களுக்கு புறப்பட்டார்கள். அம்மா, அண்ணன், அண்ணி குழுவினரும் அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு இந்துப்பூரிலிருந்து பெங்களுருக்கு பேருந்து மார்க்கமாக போக தயாரானார்கள். இந்துப்பூர் பேருந்துநிலையத்தில் வரும் பேருந்துகளில் முன்பதிவெல்லாம் செய்து போகமுடியாது; ஓடிப்போய் தான் இடம் பிடிக்கவேண்டும். எப்படியோ அண்ணன் அண்ணி முண்டியடித்துக்கொண்டு இடம்பிடித்துவிட்டார்கள். ஆரம்பத்தில் சற்றே சிரமமாய் இருந்தாலும், போகப்போக அவர்களுடைய பிரயாணம் இலகுவாக இருந்தது.  ஒருவழியாக பெங்களூர் பேருந்துநிலையம் வந்தடைந்ததும் இரவு சிற்றூண்டியை முடித்துவிட்டு எதிரேயுள்ள பெங்களூர் இரயில்நிலையத்திற்கு நடந்தே வந்து சேர்ந்தார்கள். 

ஞாயிறு இரவு 10.30 மணிக்கு பெங்களூரில் இருந்த புறப்படவிருந்த சென்னை மெயில் வண்டியை அடைந்ததும், ஒரு வழியாக தங்களுடைய முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிக்குள் ஏறி ‘அக்காடா...” என்று அம்ர்ந்தார்கள்.  பஸ் பிரயாண களைப்போடும் வந்தவர்கள் அடுத்த நாள் காலை 4 மணிக்கு பெரம்பூர் ரெயில் நிலையத்தில் இறங்கவேண்டியிருந்ததால், சீக்கிரமாகவே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட படுக்கை இருக்கையில் (பெர்த்) படுக்க ஆயத்தமானார்கள்.  அம்மாவுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த கீழ் இருக்கையில் (லோயர் பெர்த்) படுத்துக்கொண்டார்கள்.

தீங்கள் காலை (பெப்ரவரி 10) காலை 3 மணி....அண்ணனுடைய மொபைல் பேசியில் ஒலித்த ஆலாரம் சத்தத்தை கேட்டதும் அம்மா விழித்துகொண்டார்கள்...எழுந்துவிட்டு பாத்ரூம் சென்று வந்தவர்கள் இரயில் தற்போது எந்த இடத்தில் இருக்கிறது என்று விசாரித்துள்ளார்கள்...அப்போழுது அர்க்கோணத்திற்கு வெளியே (OUTER) இரயில் நின்றுகொண்டிருந்தது …. பெரம்பூர் வர இன்னும் ஒரு மணி இருந்ததால் இன்னும் கொஞ்ச நேரமும் இளைப்பாறலாமே என்று எல்லாரும் திரும்ப படுக்கச் சென்றார்கள்…..அங்கேதான் சக்கரம் சுழல ஆரம்பித்திருக்கிறது…..இரயிலினுடைய சக்கரமல்ல….முடிவு மணித்துளிகளின் சக்கரம்… ஆம், அம்மாவால் வழக்கம் போல் படுக்கமுடியவில்லை…..உடம்பிற்குள் ஒருவித அசெளகரியத்தை உணர அரம்பித்தார்கள்….உடகார்ந்த நிலையில் ஒருவித பட்படப்பும் மூச்சுத் திணறலையும் உணர்ந்திருக்கிறார்கள்….இப்படிப்பட்ட ஒரு சரீர பெலவீனத்தை அவர்கள் அதற்கு முன்பு உணரவில்லை என்றும் ‘எனக்கு என்னமோ செய்கிறது…என்னமோ செய்கிறது’ என்று சொல்லி அண்ணியை உதவிக்கு எழுப்பியுள்ளார்கள். அவர்களும் அம்மாவுக்கும் அமிலத்தன்மையினால்(acidity) நெஞ்செரிச்சல் ஏற்பட்டிருக்கும் என்று நினைத்து நெஞ்சையும் முதுகையும் தடவிவிட்டிருக்கிறார்கள்.  பொதுவாய் அம்மா acidity-யை உணரும்பொழுது கொஞ்சம் ஸ்ப்ரைட் அருந்துவது வழக்கம். அது அவர்கள் எப்பொழுதும் வைத்திருக்கும் பானம். ஒருவேளை ஸ்ப்ரைட் உதவலாம் என்று கொஞ்சம் கொடுத்திருக்கிறார்கள்.  அதைத் சிறிதளவே குடித்ததும் வேண்டாமென்று மறுத்திருக்கிறார்கள்.   மேல்வயிற்றை இறுக்கி பிடித்தது போன்ற ஒரு வலியையும் உணர்ந்திருக்கிறார்கள். அதிகாலையிலே குளிர்ந்த வெப்பநிலை காணப்பட்டாலும், அவர்களுக்கு சட்டென்று நன்றாக வியர்க்க ஆரம்பித்துள்ளது.  இந்த போரட்டத்தின் நடுவிலே இரயில் பெரம்பூரையும் நெருங்கிவிட்டது.   சிரமப்பட்டு எல்லாரும் பெரம்பூர் நிலையத்தில் இறங்கியுள்ளார்கள்.  அசெளகரியத்தை நெடுகவே உணர்ந்து கொண்டு வந்த அம்மா இரயில் நிலைய நடைமேடையில் இறங்கியதுமே அண்ணனிடம், “என்னை சீக்கிரமாக டாக்டரிடம் அழைத்து செல்….எனக்கு ஏதோ செய்கிறது” என்று அண்ணனிடம் சொல்லிக்கொண்டே நடக்க முயன்றவர்கள் அங்குள்ள மேஜையிலேயே அமர்ந்துவிட்டார்கள்.  அருகிலுள்ள இரயில் நிலைய நுழைவாயிலுக்கு சென்று ஒரு டாக்சியைப் பிடித்து பக்கத்திலுள்ள மருத்துவமனைக்கு சென்று முதலுதவி அளித்துவிடலாம் என்று நினைத்த அண்ணன் வேகமாய் நடக்க அரம்பித்த்ருக்கிறார்.  அம்மாவினால் தொடர்ந்து நடக்க முடியாததால் மீண்டும் உடகார்ந்துவிட்டார்கள்.  உடனடியாக இரயில் நிலைய அதிகாரியை அணுகி அவரிடமிருந்து ஒரு சக்கர-நாற்காலியை(wheel-chair) அண்ணன் கொண்டுவந்தார்.  இதற்குள்ளாக, மிகவும் பெலவீனமடைந்திருந்த நிலையில் இருந்த அம்மாவால் சக்கர-நாற்காலியின் மேல் கால்களை சரியாக வைக்க முடியவில்லை.  எப்படியோ அவர்களை உட்கார வைத்து சக்கர நாற்காலியை நகர்த்தியிருக்கிறார்கள்.  அண்ணனோ எல்லா பெட்டிகளையும் பைகளையும் சுமந்துகொண்டு நுழைவாயிலை நோக்கி வேகவேகமாய் நடக்க...அண்ணி அவர்கள் தள்ளிக்கொண்ட வந்த சக்கர-நாற்காலி பின்தொடராததை கண்டு திரும்பியிருக்கிறார்...அம்மாவின் கால்கள் முற்றும் தளர்ந்துபோய் சக்கர-நாற்காலியின் இடைவேளிக்குள் இறங்கிவிட்டதால் அண்ணியால் நாற்காலியை தொடர்ந்து நகர்த்தமுடியவில்லை.....அத்தோடு அம்மாவும் நினைவிழந்து நாற்காலியிலேயே தலையை சாய்த்துவிட்டார்கள்....உடனே அண்ணன் எல்லா பைகளையும் கீழே போட்டுவிட்டு அம்மாவின் இரண்டு கால்களையும் பிடிக்க அண்ணி அவர்கள் சக்கர-நாற்காலியை வேகவேகமாய் நகர்த்த இரயில் நிலையத்தின் நுழைவாயிலில் ஒரு கால்-டாக்சியை பிடித்து அம்மாவை உள்ளே ஏற்றினார்கள்.  அங்கிருந்து இரண்டு நிமிட தூரமே உள்ள சென் மருத்துவமனைக்கு அவர்களை அழைத்துசென்றிருக்கிறார்கள்......சுயநினைவிழந்த நிலையில் இருந்த அம்மாவை மருத்துவமனைக்குள் கொண்டுசெல்லுமுன் அங்குள்ள டாக்டர் ஒருவர் வெளியே வந்து டாக்சியிலேயே அம்மாவை பரிசோதித்திருக்கிறார்.......நாடித்துடிப்பு ஏற்கனவே நின்றுவிட்டதாக உறுதிசெய்தார்.......ஆம், சக்கர நாற்காலி நகர்ந்துகொண்டிருந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை சக்கரம் ஏற்கனவே நின்றுபோய்விட்டது....மருத்தவமொழியிலே ‘மிகத்தீவிர மாரடைப்பு’ (massive cardiac arrest) அவர்களை எங்களிடமிருந்து நொடிப்பொழுதில் பிரித்துவிட்டது....தன்னுடைய ஓட்டத்தை எவ்வித முன்னறிவிப்புமின்றி முடித்துவிட்டார் என்னுடைய தாயார்.....தன்னுடைய வாழ்நாளில் மருத்துவமனை அட்மிஷன், ஆபரேஷன், போன்றவைகளுக்கு வெகு தூரமாய் விலகி இருந்த என்னுடைய தாயார் என்னதான் கடைசி நேரத்திலே “டாக்டரிடம் அழைத்துச் செல்..டாக்டரிடம் அழைத்துச் செல்” என்று திரும்பதிரும்ப கேட்டுக்கொண்டாலும் அவர்களுடைய  மனவிருப்பத்தின்படியே மருத்துவமனைக்குள் நுழைவதற்கு முன்னரே தன்னுடைய ஜீவனை விட்டுவிட்டார்கள்.....

தங்களுடைய கண்களுக்கு முன்பாக நடந்துமுடிந்துவிட்ட, சற்றும் ஜீரணிக்கவே முடியாத இந்த தகவலை யாருக்கு சொல்வது? எப்படி அறிவிப்பது என்ற தவிப்போடும், அழுகையோடும், குமுறலோடும் இருந்த அண்ணனும் அண்ணியும் இன்னும் இருட்டோடு இருந்த அந்த அதிகாலை வேலையிலே முதலாவது எங்களுக்கு அறிவித்தமும் எங்களால் உண்மையாவே ஏற்றுக்கொள்ளவோ, நம்பவோமுடியவில்லை........அது இருக்காது....நாம் வேறெதாவது மருத்துவரிடம் பார்க்கவேண்டும் என்ற யோசனைகள் எல்லாம் தோன்றின....ஆனால், எந்த மருத்துவராலும் போன உயிரை திரும்பகொண்டுவர முடியாதே!.....நிஜத்தை உள்ளம் நம்ப மறுத்தாலும் நிதர்சனத்தை சந்தித்துதானே ஆகவேண்டும்.....

“பத்திரமாக போய்ட்டு வாங்கமா” என்று அவர்களிடம் சொன்னேன்....

அவர்களும்.... “ம்ம்.சரி.சரி...” என்றார்கள்

வீட்டிலிருந்து வெளியே புறப்படும்பொழுதெல்லாம், எல்லோரைப் போலவும், நான் (நாங்கள்) அம்மாவிடம் தவறாமல்  சொல்லும் ஒரு வார்த்தை “போய்டு வரேன்மா...” ஆனால், அன்றைக்கு அண்ணன் வீட்டிலிருந்து புறப்படும்பொழுது நான் சொன்னது எனக்கே சற்று வித்தியாசமாய் இருந்தது...அதுவரை அப்படி சொன்னதாகவும் எனக்கு நினைவில்லை....

இந்த ஒரு முறை அவர்களுடைய ‘சரி’ தவறாக போய்விட்டது.....எனக்கு மட்டுமல்ல...அவர்களோடு கூடப் பிறந்தவர்கள், என்னோடு கூட பிறந்தவர்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களுடைய வருகையை மிக ஆவலோடு எதிர்ப்பார்த்திருந்த என் அப்பாவுக்கும்....இந்த சரி தவறாய் போய்விட்டது...ஒரு சகாப்தம் முற்றுபெற்றுவிட்டது
   
ஒருவேளை இந்தப் பதிப்பிலே அவர்களுடைய ஓட்டத்தின் முடிவைப் பற்றி அதிகமாய் அளவளாவியிருந்தாலும் அம்மையாருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உருவாக்கபட்டுள்ள இந்த வலைப்பதிவில், ‘.உலக மகளிர் தினத்தை’ எதிர்நோக்கியுள்ள இந்த நேரத்தில் என்னுடைய (எங்களுடைய) வாழ்க்கையில் நான் சந்தித்த, என்னை அதிகமாய் பாதித்த, என்னை அதிகமாய் நேசித்த, என்னை ஒருபோதும் விட்டுக்கொடுக்காத என் ‘அம்மாவை’  குறித்த நினைவலைகளை நாம் கற்றுக்கொள்வதற்கு பாடமாகவும், அத்தகைய பெண்டிர்களை நாம் போற்றி ஆற்றவேண்டிய கடமைகளை குறித்த என்னுடைய கருத்துக்களையும் வரும் நாட்களில் பதிவு செய்ய விளைகிறேன்...ஒன்றான மெய்த்தேவனின் இறையருள் உங்கள் ஒவ்வொருவருடனும்....குறிப்பாய் உங்களை ஈன்றெடுத்து, வளரத்து, ஆளாக்கியுள்ள உங்களுடைய அன்னையருடனும் தந்தையருடனும்....இருக்க என்னுடைய வேண்டுதல்கள், வாழ்த்துக்கள்!


மீண்டும் சந்திப்போம்....!